Navigation


RSS : Articles / Comments


demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..

7:18 AM, Posted by sathiri, No Comment

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம்.


பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில் தொடங்கியது.

கோவணங்கள் மட்டுமேயணிந்த சிறுவர்கள் ஒரு தென்னம் தோப்பிலிருந்து எம்மை நோக்கி ஓடி வருகிறார்கள்.."இந்த நாடு சுதந்திரமடைத்த நாளிலிருந்து நாங்கள் தமிழராக எங்கள் மொழியை பேசுகிற உரிமை எதோ ஒரு விதத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது".. என்கிற ஜூட் ரட்ணத்தின் குரலோடு ஆங்கிலேயர்கள் கனிமவளங்களை ஏற்றி செல்வதற்காக அமைக்கப்பட்ட புகையிரதப்பதையில் நிலக்கரியில் இயங்கும் புகையிரதத்தோடு படமும் நகரத் தொடங்குகிறது .பின்னர் கைவிடப்பட்ட புகையிரதப்  பெட்டிகளை பெரியதொரு ஆலமரமொன்று  ஆக்கிரமித்து வளர்ந்திருப்பதை காட்டுவதோடு இரண்டு நிமிடத்திலேயே இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்.. தென்னிலங்கையில் மருதானைக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் பூங்காவில் சிறிய விளையாட்டு இரயிலை கலரில் காட்டுவதினூடு எம்மை நிகழ்காலத்துக்கு கொண்டுவருகிறார். அந்த இரயிலில் ஏறி விளையாடுவதற்காக "அப்பா   இங்கை வாங்கோ".. என சத்தமாக அழைக்கிறான்.

"இது எனது மகன் .சத்தமாக தமிழில் கதைக்கும்போதெல்லாம் என்மனதின் ஆழத்தில் எங்கிருந்தோ ஒரு பய உணர்வு என்னுள் தோன்றி உடலை நடுங்க வைக்கும். காரணம் அப்போ எனக்கு ஐந்து வயது நான் தமிழில் சத்தமாக கதைதுவிடக் கூடாது என்பதற்காகவே அப்பா பல நாட்கள் என் வாயை பொத்திப்பிடித்து வைத்திருந்திருக்கிறார்". என்று தொடர்ந்து ஒலிக்கும் குரலோடு 1983 ம் ஆண்டின் யூலை கலவரத்தின் காட்சிகள் புகைப்படங்களாக நகருகின்றது.அம்மணமாக  இருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழரை சுற்றி ஆனந்தக் கூத்தாடும்சில சிங்கள இளைஞர்.   உலகத்தையே உலுக்கிப்போட்ட இந்தப்படத்தை கையில் பிடித்தபடி நடந்துவரும்  ஒரு சிங்கள புகப்படப்பிடிப்பாளர்.. "இதோ இந்த இடத்தில்தான் அந்த தமிழரை அம்மணமாக இருத்தி வைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள்.நான்தான் இந்தப்படத்தை ஒரு பேருந்தின்  பின்னல் மறைந்திருந்து எடுத்தேன்.அந்த தமிழரை காப்பாற்றாது எதற்கு படமெடுத்தாய் என என்னை நீங்கள் கேட்கலாம்.தடுக்கப் போயிருந்தால் என்னையும் அவர்கள் கொலை செய்திருப்பார்கள்.படத்தை எடுத்துக் கொண்டுபோய் காவல்துறையிடம் கொடுத்துவிட்டேன்.என்னால் முடித்து அவ்வளவுதான்"... என்கிறார்.அடுத்து அகதிகளாக தமிழர்கள் வடக்கு நோக்கி சென்ற இரயிலில் பணிபுரிந்த இரயில் திணைக்கள ஊளியர்களின் அனுபவங்களையும்.தமிழர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து,அழித்து பயந்து வாழ்ந்த வாழ்க்கைகளையும் பதிவு  செய்தவாறு நகர்ந்த ஒளிப்படக்கருவி அடுத்த முக்கிய காலகட்டத்துக்கு எம்மை அழைத்துச்செல்கிறது .

அடிவாங்கி அகதிகளாக வடக்கு நோக்கிச் சென்றவர்களில் சிங்களவர்களுக்கு எப்படியும் திருப்பியடிக்க வேண்டும்.தனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என ஈழ விடுதலை இயக்கங்களில் இணைகிறார்கள்.அப்படிதான் எனது மாமாவும் இயக்கத்துக்கு போனார் என்று தற்சமயம் கனடாவில் வசிக்கும் மனோகரன் என்பவரை யூட் அறிமுகப் படுத்துகிறார்.இந்த ஆவணப்படத்தின் கதா நாயகன் என்றே அவரை சொல்லலாம்.N.L.F.T அமைப்பிலிருந்த மனோகரன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு திரும்பியவர்.குடும்பமாக அவர்கள் வாசித்த கண்டி நகருக்கு சென்று 83 கலவரத்தின்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள மக்கள் முன்னால் போய் நிக்கிறார்.யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.தன்னை அடையாள படுத்தியதும் அவர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர்ரோடு நலம் விசாரிக்கிறார்கள்.பின்னர் அங்கிருந்து தன்னோடு இயக்கத்திலிருந்த நண்பனைத் தேடி யாழ்ப்பாணம் போகிறார்.அவருக்கும் நண்பருக்குமான உரையாடலில் விடுதலை இயக்கங்களுகிடையிலான மோதல்கள் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை நினைவு மீட்டுகிறார்கள் .இவர்களோடு .T.E.L.O; P.L.O.T; E.R.O.S;L.T.T.E..ஆகிய உறுப்பினர்களும் நினைவு மீட்டல்களில் பங்கெடுக்கிறார்கள்.ஒவ்வொருவரும் இயக்க மோதல்களையும் தாங்கள் உயிர் தப்பியதையும் விபரிக்கிறார்கள்.தங்களின் இயக்கமான .N.L.F.T புலிகளால் தடை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான மனோகரன் தோட்டத்துக்கு வேலைக்கு போகும் கூலித் தொழிலாளி போல் அழுக்கான சாரமும் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு பழைய சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்லும் போது சாவகச்சேரி பகுதியில் காவலுக்கு நின்ற புலி உறுப்பினர் ஒருவர் தங்கள் காவலரண் அமைப்பதற்காக இரயில் தண்டவாளத்தை கிழறி எடுத்து அதனை துண்டுகளாக வெட்டிக் கொடுத்துவிட்டு போகும்படி கட்டளையிடுகிறார்.இது அவருக்கு மட்டுமான கட்டளையல்ல .

அந்தப்பகுதியால் சென்றவர்கள் அனைவருக்குமானது.ஒருவர் எட்டு தண்டவாளங்களை அறுக்கவேண்டும்  அதுவும் சாதாரணமாக  இரும்பு அறுக்கும் வாளால்.அப்படி எட்டு தண்டவாளங்களை அறுத்துக்கொடுதுவிட்டு இயக்கச்சி வழியாக இராணுவப்பகுதிக்கு தப்பிச் சென்று கனடா சென்று விடுகிறார்.
இப்படி அனைவருமே தனி நாட்டுக்கான போராட்டம் எனத் தொடக்கி பின்னர் ஒரு இயக்கம் ஒற்றுமையின்மையால் இன்னொரு இயக்கத்தை அழித்து படுகொலைகளை செய்தது மட்டுமல்ல அப்படி ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தை அழிக்கும்போது பலமான இயக்கத்துக்கு மக்களும் ஆதரவு கொடுத்தது.குறிப்பாக புலிகள்  ரெலோவை அழிக்கும்போது எந்தக் கேள்வியுமின்றி புலிகளுக்கு சோடாவும் உணவும் கொடுத்து வரவேற்றது புலிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் மற்றைய இயக்கங்களையும் அவர்கள் தடை செய்து அழித்து தனிப்பெரும் இயக்கமாக மாறிய புலிகள்  பின்னர் அழிக்கப்பட்டதற்கும் அதிகாரத்தோடு ஒத்தோடும் பெரும்பான்மை தமிழ்  மக்களின் மனநிலையும் ஒரு காரணம் என்கிற பொதுவான வாதத்தை அனைவரும் முன்வைகிறார்கள்.
இறுதியாக புகையிரதப்பெட்டிகளை ஆக்கிரமித்து நின்ற பெரிய ஆலமரம் வெட்டப்பட்டு அவை விடுவிக்கப் படுவதோடு மீண்டும் கொழும்பிலிருந்து யாழுக்கான பிகையிரதப் பாதை போடப்படும் காட்சியோடு படம் முடிவடைகிறது.திரையரங்கத்தில் அனைவருமே  தங்கள் கண்களை துடைத்து விட்டபடியே சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக கரவொலி எழுப்பிகொண்டிருந்தார்கள்.அப்பொழுது யூட்ரட்ணத்தை நோக்கி வந்த இளவயதுப் பெண்ணொருவர் அவர் கையைப்பிடித்து  "நான் இந்த நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவள் அப்பா இலங்கைத் தமிழர்தான் .நான் இதுவரை இலங்கை சென்றதில்லை.அப்பா அடிக்கடி தனது நாட்டைப்பற்றி சொல்வார் ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஒரு இனத்தின் துயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது".என்று வார்த்தைகள் முட்டி மோதி அழுகையோடு சொல்லிவிட்டு சென்றார்.  "இதை விட உங்களுக்கு வேறு விருதுகள் தேவையில்லை ".யூட் ரட்ணத்தின் தோளில் தட்டி சொல்லிவிட்டு வெளியே வந்து கனத்த மனத்தோடு கான் நகர கடலை நீண்ட நேரம் வெறித்தபடியே இருந்தேன்....