Navigation


RSS : Articles / Comments


ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது திருப்தியளிக்கின்றது.. சொன்னவர்.கருணாநிதி..

3:29 PM, Posted by sathiri, 3 Comments

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன.. என்று கருணாநிதி கூறியுள்ளார்..அதாவது இன்று நடந்தவை..


முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்

1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்

2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்

ஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன.

அத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர்.

மருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

திலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி ராஜபக்ச உண்ணாவிரதம்.

1:01 PM, Posted by sathiri, 29 Comments



வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தவும்.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டியும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்தி வருகிறார்கள்.குறிப்பாக ஜரோப்பிய நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ்.ஜெர்மனி.சுவிஸ்.நெதர்லாந்து.ஆகிய நாடுகளிலும். கனடாவிலும் தொடர்போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து உலக நாடுகளின் போக்கில் சிறிது மாற்றம் வந்திருக்கின்றது. இந்த நாடுகளும் போரை நிறுத்தச் சொல்லி இலங்கையரசிற்கு அழுத்தமற்ற ஒரு வேண்டுகோளை இலங்கையரசிற்கு வைத்திருக்கின்றன.அதே நேரம் ஜ.நா சபையும் தன்பங்கிற்கு கவலை தெரிவித்துள்ளது.

அது தவிர்ந்து மனிதவுரிமை மையம். மற்றும் வேறு மனிதவுரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும். ஜ.நா சபையிடமும் இலங்கையரசிடமும் நேரடியாகவே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதே நேரம் உலகநாடுகள் நேரடியாக தலையிடவிடாமல் தடுத்து தானே நேரடியாக இலங்கையரசுடன் சேர்ந்து இந்த யுத்தத்தினை நடாத்தும் இந்திய அதிகாரத்திடமிருந்து பிரணாப் முகர்ஜியும்..நாராயணனும்... மேனனும் கூட போரை நிறுத்தச்சொல்லி அறிக்கை விட்டுவிட்டார்கள். அதே நேரம் படுகொலை செய்யப்படும் தமிழர்களை நினைத்து சோனியவும்.. மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்து விட்டார்கள். இவர்களையெல்லாம் விடுங்கள் வேற்று நாட்டவர்கள் வேற்று இனத்தவர்கள் வேற்று மொழிக்காரர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.

ஆனால் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் கரணாநிதி அவர்கள்கூட அவரிடம் தொலைபேசி வசதியோ..தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை சோனியாவிற்கும். மன்மோகன் சிங்கிற்கும். அனுப்பியுள்ளார்.. அதற்கடுத்ததாய் வருகிற 23 ந்திகதி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது ..பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது என்று கருணாநிதி சொன்னது யாரிற்காவது நினைவிற்கு வந்தால் அதனை தயவு செய்து மறந்து விடுங்கள்..

ஏனென்றால் மக்களின் மறதிதானே தமிழ்நாட்டு அரசியலின் வெற்றி.. இனியென்ன அடுத்ததாக உலகத்தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு செய்தி என்னவெனில் இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்..

கருணாநிதி கைது செய்யப்படுவாரா??

2:49 PM, Posted by sathiri, 4 Comments



கருணாநிதி அவர்கள் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிற்கு இன்று வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பயங்கரவாதியல்ல... அவர் எனது நண்பன் என்றும் அவர் உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளவேளை ... காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் அதன் முக்கிய உறுப்பினருமான கபில் சிபல் அவர்கள்.. பிரபாகரன் பயங்கரவாதியே என்றும். அவரது அமைப்பு பயங்கரவாதஅமைப்பு என்றும் அதனை காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்பாகவே பார்ப்பதாகவும் கருத்து சொல்லியுள்ளார்..எனவே காங்கிரஸ் கட்சி பயங்கரவாதியாகப் பார்க்கும் பிரபாகரனை நண்பர் என்று சொல்லி ஆதரித்தது மட்டுமல்லாமல் அவரது அமைப்பு உயரிய நோக்கத்திற்காக போராடுகின்றது என்று சொன்னதன் மூலம் கருணாநிதி இந்தியஇறையாண்மையை (இயலாமையை) மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்படுவாரா?????....................

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

1:44 PM, Posted by sathiri, 10 Comments

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன...அதற்காக நாங்கள் அதிர்ந்து போகவோ .. ஆச்சரியப்படவோ இல்லை..பேசிப்பேசியே மரத்துவிட்ட உங்கள் நாக்குகளிற்கு எங்கள் இரத்தத்தை நக்கியாவது உணர்வு வந்தால் உண்மையில் நன்றிகள்..உங்களிற்கல்ல.. எங்கள் உறவுகளின் இரத்தத்திற்கு....

தொட்டு நக்கிக் கொள்ளுங்கள்..


.....

காப்பாற்றுங்கள் தாயே...........சோனியா

2:17 PM, Posted by sathiri, 5 Comments

காப்பாற்றுங்கள் தாயே ஈழத்தமிழரையல்ல என்னையும் என்னுடைய குடும்பத்தையும். உங்களை நம்பித்தான் அழகிரியை வேறை இறக்கி விட்டிருக்கிறேன்.

கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

12:58 PM, Posted by sathiri, 9 Comments

இன்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிற்கு ஒரு சின்னமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் கருநாநிதியை குடும்பத்துடன் கொலை செய்யப்போவதாக மிரட்டியவரின் ஆயுதம் தாங்கிய படம் சி.பி.ஜ அதிகாரிகளின் கைகளில் சிக்கியது.. படம் கீழே

கீழே



கீழே



கீழே


இன்னமும் கீழே



இன்னமும் கீழே













அதனைத்தொடர்ந்து சி.பி.ஜ. மற்றும் சி.ஜ.டி..யினரும் தமிழக காவல் துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியதில் மிரட்டல் விடுத்த கொலையாளி சிக்கினார்...

இவர் தற்சமயம் தீவிர விசாரணைகளிற்காக உளவுப்பிரிவினரின் மறைவிடமொன்றில் இரகசியமாக வைத்து விசாரிக்ப்பட்டு வருகின்றார். இவரிற்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொர்புகள்.. அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புகள் உள்ளதா என்கிற கோணத்திலும் தீவிரமாக விசாரணைகள் நடைபெறுகின்றது..

மியாவ்..........................................

தருமகர்தாவும் கருணாநிதியும்.

1:12 PM, Posted by sathiri, 9 Comments

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்ச்சனம் எல்லாம் சேந்துதான் தருமகத்தா சபையை தெரிவு செய்யிறவை.இரண்டு வருசத்துக்கொருக்கால் கோயில் திருவிழா முடிஞ்சதும் வழைமைபோலை கோயில் மண்டபத்திலை ஊர்ச்சனம் எல்லாம் சேந்து தர்மகத்தா சபைஉறுப்பினர்களையும் உதவி சபை உறுப்பினர்களையும் தெரிஞ்செடுப்பினம்.நாட்டுத்தேர்தலை போலவே அந்தத் தேர்தலை புறக்கணிக்கிறவையும்.அக்கறையில்லாமல் அந்தப் பக்கம் வராதவையும் இருந்தவைதான்.

ஆனால் அங்கையியும் வயதுக்கு வராதவையள் (சாமத்தியம் எண்டு தவறாய் நினைக்க வேண்டாம்)ஓட்டு போடமுடியாது. எங்கடை ஊரிலை வயதுக்கு வாறது எண்டிறது வயதெல்லையை வைத்து இல்லை. ஒருவர் தனியாய் சம்பாதித்து கலியாணம் கட்டி போகாமல் எத்தனைவயதானாலும் வெட்டியாய் குடும்பச்செலவிலை இருக்கும்வரை அவர் வயதுக்கு வராதவர்தான்.இரண்டு வருசத்துக்கொரு தடைவை தருமகத்தாசபையிலை உறுப்பினர்கள் மாறிக்கொண்டிருந்தாலும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையிருந்து தலைவர் மட்டும் மாறவேயில்லை.ஊர் காரரும் அவரை மாத்திறதாய் தெரியேல்லை. காரணம் அவர் கோயில் நிருவாகத்தை எப்பிடி கவனிச்சவரெண்டு தெரியாது.. ஆனால் ஊரிலை குறிப்பிட் சில சாதிக்காரரை கோயிலுக்குள்ளை விடாமல் தடுக்கிறதிலை முன்னுக்கு நிப்பார்.அதனாலையே கோயிலுக்குள்ளை போய் ஒட்டுப்போடுற சாதிசனம் அவரை தொடந்தும் தலைவர் பதவியிலை வைச்சு அழகு பாத்தவை.அவரைப்பாத்தால் நல்ல கறுவல். கட்டையர்.

ஆறுமுகநாவலரின்ரை சிலையை அச்செடுத்த மாதிரி இருப்பார்.(ஆறுமுக நாவலரை நான் நேரை பார்த்தது இல்லை) அவரின்ரை உடம்பிலை எப்பவும் விபூதிக்குறிகள் பளிச்சிடும்.பாக்கிறதுக்கு ஒரு சைவப்பழம் மாதிரி இருப்பார். அவரின்ரை வீட்டு நாய் அவையின்ரை கறிச்சட்டியை கோயில் வீதியிலை கொண்டுவந்து வைச்சு நக்கும் வரைக்கும் அவையின்ரை வீட்டிலை மச்சம்(மாமிசம்)சாப்பிடுறது எங்களுக்குத்தெரியாது.. அது மட்டுமில்லை ஒருநாள் ஒரு உடும்பு ஒண்டை நாங்கள் கலைக்க அது தருமகத்தாவீட்டுக்காணிக்குள்ளை ஒடிப்போய் அவையின்ரை வைக்கல் பட்டடைக்குள்ளை புகுந்திட்டுது.விடாமல் கலைச்சுக்கொண்டு போன நாங்களும் வைக்கல் பட்டடைக்குள்ளை புகுந்து வெளியிலை வரேக்குள்ளை உடும்பை விட்டிட்டு இரண்டு பியர்போத்திலோடை வந்தம். அப்பொழுதுதான் தர்மகத்தாவின்ரை அழகான வண்டிக்கு (வயிறு)அர்த்தம் தெரிஞ்சது. அவருக்கு எங்கடை வயதையொத்த ஒரு வடிவான மகளும் இருந்தவா..
அவாவும் கோயில் நெய் புக்கையை(பொங்கல்) தின்று வளந்ததாலை சும்மா வள..வள..தள ..தள..வெண்டு நல்ல வடிவு.

இனி விசயத்துக்கு வருவம். நாங்களும் கொஞ்சம் விடைலைப் பருவத்திற்கு வந்த 80 களின் காலத்திலைதான் ஊரிலையும் ஆயுதப் போராட்டம் பல மாற்றங்களை கொண்டுவந்தது.அதைப்போலை ஊர் இளசுகள் நாங்களும் எங்கடை ஊர் கோயில் நிருவாகத்திலை மாற்றம் கொண்டுவரவேணும் எல்லா சனமும் கோயிலுக்குள்ளை போகவிடவேணும் எண்டு கூடி யோசிச்சம்.அந்த வருசத்திருவிழாவிலை ஓதுக்கிவைச்சிருக்கிற சனத்தை சாமி தூக்கவிடுறதெண்டும். அடுத்ததாய் வாறதேர்தலிலை நாங்கள் தருமகத்தா சபைதலைவருக்கெதிராய் ஓட்டுபோட்டு அவரின்ரை தலைமைப்பதவியை இறக்கி இளசுகளையும் சேர்த்து புதிய சபையை உருவாக்கிறதெண்டு திட்டம் போட்டு அதுக்கு ஆதரவாய் சனங்களோடையும் கதைக்கதொடங்கினம். ஆரம்பமே பிரச்சனையாய்தான் இருந்தது பிள்ளையாரை புத்தராய் மாத்தசொன்னதுபோலை பெரும்பாலன சனங்கள் தலைவரை மாத்தமுடியாது என்று அடிச்சு சொல்லிப்போட்டினம்.

நாங்கள் தலைவருக்கெதிராய் புரட்சி( மற்றைவையின்ரை பாசையிலை சதி) செய்யதொடங்கிட்டம் எண்டு கேள்விப்பட்டு தலைவரே உடனடியாய் நாங்கள் குந்தியிருந்து கும்மியடிக்கிற மடத்துக்கு தன்ரை மகளோடை தேடிவந்து

"பெடியள் எப்பிடி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ ""

என்று அவரின்ரை அன்பான விசாரிப்பை கேட்டதுமே... அவர் விசயமாய்தான் வந்திருக்கிறார் எண்டு விளங்கியது

."" என்ன எல்லாரும் சேந்து அப்பாவை தூக்கப்போறீங்களாம் எண்டு கதை அடிபடுது.. நான் நம்பேல்லை .. அப்பாவிட்டையும் சொன்னான் எங்கடை போய்ஸ்( boys ) அப்பிடியெல்லாம் செய்யமாட்டினம் .. அவையள் நல்லவை ஆனாலும் ஒருக்கால் நேரை கேட்டுப்பாம்பம் எண்டுதான் வந்தனாங்கள்...""

என்றாள் அழகுமகள். அவளின்ரை கடைக்கண் பார்வை பட்டாலே போதுமெண்டு பிள்ளையார் கோயிலை சுத்திவருகிற எங்களிற்கு. அவளே அருகில் வந்து அன்பாய் கதைச்சதும். எங்கள் எல்லாரையும் லிங்கம் கூல்பாருக்கு கூட்டிக்கொண்டு போய் கிலோகணக்கிலை ஜஸ்கிறீமை வாங்கி தலையிலை கொட்டினதைப்போல விறைச்சுப்போய்.. ஆவெண்டபடி அசையாமல் நிண்டம்.எண்டாலும் சுதாகரிச்சுக்கொண்டு ஆளாளுக்கு

..இல்லை...வந்து....அது...என்னவெண்டால்...எண்டு தட்டுத்தடுமாற. எங்கள்கூட்டத்தில் ...எந்தஅழகு தேவதையை கண்டாலும் தடுமாறாத ஆண்மகனொருவன் இருந்தார் ( அது நானில்லை) அவர் எழும்பி தலைவரை பாத்து

" பெடியள் சொல்லுறதிலையும் நியாயம் இருக்கு இன்னமும் நாங்கள் சாதி சமயமெண்டு அடிபடுறதாலைதான் சிங்களவன் எங்களை மேய்க்கிறான் அதாலை இந்தமுறை திருவிழாவிலை எல்லாரும் சாமிதூக்கவிடுவம்""...எண்டதும் ... தலைவரோ ""இஞ்சை பாரும் பெஞ்சனியர் நீர்தான் பெடியளை கெடுக்கிறீர் எனக்கெதிரா சதிசெய்து என்ரை பதவியை நீர் பறிக்கலாமெண்டு பிளான் போடுறீர்.சிங்கப்பூர் பெஞ்சனியர் எண்டாப்போலை நீர் ஒண்டும் பெரிய மயிர் இல்லை ""என்றபடி கோபமாய் கத்திவிட்டு அங்கிருந்து போய்விட. அவரின் மகளோ எங்களிடம்

""உங்களிற்கு இப்ப என்னதான் பிரச்சனை அப்பாவை தலைவர் பதவியிலையிருந்து துக்கிப்போட்டு புதிசாய் இளம்தலைமுறையிலை யாரையாவது சபையிலை போடவேணும் அவ்வளவும்தானே???"" என்றதும்..

அட அப்பனை விட மகள் பிரச்சனையை இலகுவாய் விளங்கிட்டாள் இனி எல்லாம் சுமுகமாய் நடக்குமென்று மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் சம அளவிலை கலந்து அவளைப் பாத்து .. ஓம் எங்களுக்கு அதுதான் பிரச்சனை என்று எல்லோரும் மிண்டிவிழுங்கினபடி ஒரே குரலிலை சொல்லி முடிச்சம்.

""இது சின்னப்பிரச்சனை இந்தமுறை நீங்கள் எல்லாரும் சேந்து என்னை தலைவராய் தேர்ந்தெடுங்கோ நீங்கள் விரும்பின மாதிரி அப்பாவையும் பதவியாலை விலத்தினமாதிரியும் இருக்கும் உங்களிலை ஒருத்தரான நான் இளம்தலைமுறை அந்த இடத்திற்கு வந்தமாதிரியும் இருக்கும் பிரச்சனை முடிஞ்சுது .வடிவாய் இருந்து யேசிச்சு நல்ல முடிவாய் எடுங்கோ...

என்றுவிட்டு போகும் பொழுது பாதிவழியில் நின்று திரும்பிப்பாத்து ஒரு புன்னகை ஒன்றையும் பிச்சையாய் எறிந்துவிட்டு போய்விட்டாள். மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் சம அளவிலை கலந்து கட்டின கோட்டை சில நிமிசத்திலையே கரைந்துவிட அசடுவழிந்த முகங்களை நாங்கள் துடைக்க ""அப்பனுக்கு தப்பாமல்தான் பிறந்திருக்கிறாள் என்றான் ஒருத்தன். அவளையே தலைவராக்கி அளகு பார்க்கலாமென்று என்ரை மனசு என்ரை காதிலை கிசு கிசுத்தாலும் வெளியாலை சொன்னால் அடிவிழும் எண்டதாலை ..இனி வாயாலை கதைக்கிறதில்லை வன்முறைதான் சரியெண்டு முடிவெடுத்தம்.

அந்தவருசம்திருவிழாவும் பரபரப்பாய்தான் தொடங்கியது. முதல்நாள் கொடியேத்தம் அன்றே அனைத்து சமூகத்தினரையும்சேர்ந்த சிலரை நாங்கள் தயார்ப்படுத்தி கோயிலுக்குள்ளை அனுப்பவும்.. தர்மகத்தாவும் ஊர்காரர் சிலரும் சேர்ந்து அவர்களை வெளியாலை தள்ளிவிட்டு சனத்தையும் வெளியேத்தி விட்டு இனி திருவிழாவும் இல்லை பூசையும் இல்லையெண்டு சொல்லிவிட்டு அவசரமாய் பூசாரியையும் சில சனங்களையும் உள்ளையே விட்டிட்டு கோயிலின் பெரிய கதைவை இழுத்து பூட்டிவிட்டார்கள். நாங்கள் பூட்டினை உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்க தருமகத்தாவும் சிலபேரும் எங்களை நோக்கி வாள் பொல்லுகளோடை ஓடிவர எங்கடை பக்கம் நிண்டிருந்த பெடியங்கள் சிலபேரின்ரை கையிலை திடீரெண்டு கைத்துப்பாக்கிகள் முளைச்சு அவையை நோக்கி திரும்பினதுதான் தாமதம் எல்லாருமே ஓடிவிட...

தருமகத்தா மாத்திரம் வெறிபிடிச்சவர்போலை(உண்மையிலையே வெறியோ தெரியாது) சுடுங்கோடா என்னை சுட்டுகொண்டிட்டு அவங்களை உள்ளை விடுங்கோ எண்டு கத்திக்கொண்டிருந்தார். அவரோடை நிண்டவையள் எல்லாரும் ஒதுங்கிட்டினம் எங்கடைபக்கம் நிறைய சனத்தின்ரை ஆதரவும் கூடிட்டுது .இனி அடிவிழாது எண்ட நம்பிக்கையிலை தனிய நிண்டு கத்திக்கொண்டிருந்த தர்மகத்தாவை சமாதானம் சொல்லி அனுப்பிவைக்கலாமெண்டு அவரை நோக்கி நான் போக .... நான் அவருக்கு அடிக்கப்போறனாக்கும் எண்டு நினைச்சு அவரின்ரை மகளும் மனிசியும் ஓடியந்து அவரை கட்டிப்பிடிச்சபடி "" ஜயோ அவரை ஒண்டும் செய்து போடாதையுங்கோ எங்களுக்கு கோயிலும் வேண்டாம் பதவியும் வேண்டாம். எங்களை விடுங்கோ"" எண்டபடி அவரை இழுத்துக்கொண்டு போக.

என்ரை சினேகிதப் பெடியளும் ஓடியந்து ""பாவமடா வயசுபோன மனுசன் ஒண்டும் செய்யாதை "" எண்டு என்னை கட்டிப்பிடிச்சு இழுக்க... நான்கட்டியிருந்த வேட்டி கழண்டுபோடும் எண்ட பயத்திலை நானும் மடியைபொத்திப்பிடிச்சபடி விடுங்கோடா..விடுங்கோடா.. எண்டு கத்த.. ஒருத்தன் இடையிலை "டேய் அவன் மடிக்குள்ளை துவக்கு செருகி வைச்சிருக்கிறான்போலை அதை முதல்லை பறியுங்கோடா எண்டு கத்த.... என்னை நலைஞ்சுபேர் என்னை தள்ளி விழுத்தி எனக்குமேலைஏறிஇருந்துகொண்டு என்ரைவேட்டியைஉருவிப்போட்டாங்கள்......

நல்லவேளை உள்ளை காற்சட்டை போட்டிருந்தபடியாலை என்ரை கற்பு காற்றிலை போகமல் காப்பாத்திட்டன்.மடியிலை உள்ளை ஒண்டும் இல்லையெண்டு தெரிஞ்சதும்என்னை விட்டிட்டாங்கள் (கற்பனையை கண்டபடி ஓடவிடவேண்டாம்)நானும் கோபத்திலை வேட்டியை உதறி தோழிலை போட்டுக்கொண்டு வீட்டை போயிட்டன்.

என்னடா தலைப்பிலை தர்மகத்தாவும் கருணாநிதியும் எண்டு எழுதிப்போட்டு கலைஞர் கருணாநிதியைப் பற்றி ஒரு வசனம்கூட எழுதேல்லையே ?? எண்டு யோசிப்பீங்கள்.அது என்னவெண்டால் என்ரை அம்மா அண்மைக்கால தமிழ்நாட்டு செய்தியளை பாத்திட்டு " இவன் கருணாநிதியும் எங்கடை பழைய தருமகத்தாமாதிரி ஊரே நாசமானாலும் கடைசிவரைக்கும் எப்பிடியாவது பதவியிலை இருக்கிறதெண்டு அடம்பிடிக்கிறானெண்டார்..அதுத
ான் நானும் தருமகத்தாவை பற்றி எழுதினனான். இந்த ஒரு வசனத்துக்காக ஒரு கதையே எழுதி எங்களை ஏனடா சாவடிக்கிறாய் என்று கேட்பீர்கள்.. அது வந்து.... அது வந்து....தருமகத்தாவின்ரை மகள் நல்ல வடிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................
....................